"ஜோஸ் ஆலுக்காஸ்" - ல் திருடி மயானத்தில் புதைக்கப்பட்ட நகைகள்... சிக்கிக்கொண்டான் திருடன் டிக்காராமன்

0 8267

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இடுகாட்டில் அவன் மறைத்து வைத்திருந்த 15.8 கிலோ நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட திருடன் கொத்தனார் என்பதால், காங்கிரீட் சுவற்றில் கச்சிதமாகத் துளையிட்டு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

வேலூர் தோட்டப்பாளையம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையின் பின் பக்க சுவற்றில் துளையிட்டு கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு பல கோடி மதிப்பிலான சுமார் 15.8 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் திருடிச் செல்லப்பட்டன. 

சிங்க முகமூடியுடன் திருட்டில் ஈடுபட்ட திருடன் குறித்த சிசிடிவி காட்சிகள், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு, தகவல்கள் சேகரிக்கப் பட்டன.

ஓராண்டுக்கு முன்பு பள்ளி கொண்டா பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் மடிக்கணினி திருடிய திருடனின் உடல் அமைப்பு மற்றும் திருடிய விதம் உள்ளிட்டவை ஜோஸ் ஆலுக்காஸ் திருட்டோடு ஓரளவு ஒத்துப் போனது.

இதனையடுத்து லேப்டாப் திருடியவன் குறித்து போலீசார் விசாரணையில் இறங்கினர். இதற்கிடையே ஒடுக்கத்தூர் பகுதியில் புதிதாக வாடகைக்குக் குடிவந்த நபர் ஒருவனின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கிடமாக உள்ளதாக உள்ளூர் மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து ஒடுக்கத்தூர் சென்ற போலீசார் அந்த நபரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர். குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த டிக்காராமன் என்ற அந்த நபர்தான் நகைத் திருட்டில் ஈடுபட்டவன் என்பதை உறுதி செய்தனர்.

நகைகளை மறைத்து வைத்தது குறித்த போலீசாரின் கேள்விக்கு உண்மையான பதிலை உடனே கூறாத டிக்காராமன், பல இடங்களுக்கும் அவர்களை அலைக்கழித்தான் என்று கூறப்படுகிறது.

அவன் அடிக்கடி உத்தர காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள மயானத்துக்குச் சென்று வந்ததாக உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலைக் கொண்டு டிக்காராமனை தீவிரமாக விசாரித்ததில் மயானத்தில் நகைகளை ஒளித்து வைத்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளான்.

டிக்காராமனை மயானத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், 3 இடங்களில் அவனால் பதுக்கி வைக்கப்பட்ட நகைகளை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட டிக்காராமன் கொத்தனாராக வேலை பார்த்து வந்தவன் என்று கூறப்படுகிறது. ஜோஸ் ஆலுக்காஸில் துளையிட்ட இடத்தில் வெண்ட்டிலேட்டர் இருப்பது அவனுக்கு எப்படி தெரிய வந்தது, கடையின் ஊழியர் எவருக்காவது டிக்காராமனுடன் தொடர்பு இருக்கிறதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments